மதுரையிலும் உடல் உறுப்பு மாற்று ஆபரேஷன் : இறந்தும் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த விவசாயி

Wednesday, February 11, 2009
http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=2981

மதுரை : சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்ட விவசாயின் உடல் உறுப்புகள் 6பேருக்கு தானமாக வழங்கப்பட்டன. இதற்கான ஆபரேஷன் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் வெற்றிகரமாக நடந்தது. பிப்.,1ம் தேதி... திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஓடைப்பட்டி கிராமத்தில் விவசாயி செல்லமுத்து குடும்பத்திற்கு சோகமான நாள். "பண்ணைக்கு ஆட்களை அழைத்து வருகிறேன்' என்று இருசக்கரவாகனத்தில் சென்ற செல்லமுத்து(48), வேடச்சந்தூர் ரோட்டில் தடுப்புகள் மீது மோதி விபத்துக்குள்ளானார் என்ற தகவல் வீடு தேடி வந்தது.

மூளை செயல் இழந்த நிலையில் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரிக்கு பிப்.,2ல் சேர்க்கப்பட்டார். பரிசோதித்ததில் மூளைச்சாவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதால் செல்லமுத்துவுக்கு மற்ற உறுப்புகள் வழக்கம் போல் இயங்கின. "செயற்கை சுவாசத்தை நிறுத்திவிட்டால் இதயம் நின்று மற்ற உறுப்புகள் செயல் இழந்து விடும். எனவே நல்ல நிலையில் உள்ள உறுப்புகளை தானமாக கொடுத்து, அவர்கள் மூலம் செல்லமுத்து இவ்வுலகில் வாழமுடியும்' என்று அவரது குடும்பத்தினரிடம் டாக்டர்கள் கூறினர். உடனடியாக சம்மதம் கிடைக்க, அடுத்த 2 மணி நேரத்தில் உறுப்பு மாற்று ஆபரேஷனுக்கு அரசின் அனுமதி பெறப்பட்டது.

யார் யாருக்கு தானமாக வழங்க முடியும் என்று சென்னையில், இதற்கென உள்ள அரசு மையத்தில் கேட்கப்பட்டது. பிப்.,2ம் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு ஆபரேஷன் ஆரம்பமானது. சிறுநீரகவியல் துறை டாக்டர்கள் சம்பத்குமார், முரளி, ரவிச்சந்திரன், மயக்கவியல் டாக்டர்கள் கிருஷ்ணன், ஜவஹர், பாரதிதாசன் பல்கலை., திசுப்பரிசோதனை நிபுணர் பாலகிருஷ்ணன் உட்பட 20 பேர் கொண்ட குழு ஆபரேஷன் செய்தது. சென்னை அப்போலோ ஆஸ்பத்திரியில் லக்னோவைச் சேர்ந்த பிரேம் காந்தாரி என்பவருக்கு ஈரலை பொருத்த முடிவு செய்யப்பட்டது. செல்லமுத்து உடலில் இருந்து வெளியில் எடுத்த 6 மணி நேரத்திற்குள் பொருத்த வேண்டும் என்பதால், முதலில் ஈரலை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இங்கிருந்து கொண்டு செல்வதற்காகவே டாக்டர் ஒருவர் சென்னையிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தார்.


காலை 6 மணியளவில் ஈரல் எடுக்கப்பட்டு, காலை 7.45 மணிக்கு மதுரையில்இருந்து புறப்பட்ட முதல் விமானத்தில் (கிங்பிஷர்) எடுத்துச் செல்லப்பட்டு, வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. துடித்துக் கொண்டிருக்கும் இதயத்தை எடுத்து 20 நிமிடத்திற்குள் பொருத்த வேண்டும். ஆனால் அதற்கான சாத்தியம் இல்லாததால் இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய்கள் மட்டும் அகற்றப்பட்டு அதே விமானத்தில் சென்னை பிரன்ட்டியர் லைப்லைன் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இரு சிறுநீரகங்கள் அகற்றப்பட்டு, மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற மதுரை சாகுல்அமீதுக்கும்(38), திருச்சி மூர்த்திக்கும்(27) பொருத்தப்பட்டன. கருவிழிகள் அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கு கொடுக்கப்பட்டன. பிப்.,3 இரவு 8 மணிக்கு ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தது.


நேற்று ஆஸ்பத்திரியில் செல்லமுத்துவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அவரது படத்தை சாகுல்அமீது, மூர்த்தி திறந்துவைத்து கண்கலங்கினர். அவர்கள் கூறுகையில், ""செல்லமுத்துவுக்கும், அவரது குடும்பத்திற்கும் நாங்களும், எங்களது குடும்பமும் என்றும் நன்றி உடையவர்களாக இருப்போம்'' என்றனர். செல்லமுத்து மகன் செல்வராஜ், மகள் செல்வி கூறுகையில், ""டாக்டர்கள் கூறியவுடன் எந்த தயக்கமும் இல்லாமல் சம்மதித்தோம். இவர்கள் மூலம் எங்களது தந்தை இவ்வுலகில் வாழ்கிறார். அதுபோதும்'' என்றனர்.


ஆஸ்பத்திரி துணைத் தலைவர் குருசங்கர் மற்றும் டாக்டர்கள் கூறியதாவது: தமிழகத்தில் 90 சதவீதம் குடும்பத்தினர் மூலமும், 10 சதவீதம் மூளைச்சாவு ஏற்பட்டிருப்பவர்கள் மூலமும் சிறுநீரக தானம் பெறப்படுகிறது. சென் னைக்கு அடுத்து மதுரையில் முதன்முறையாக 6 உறுப்புகள் ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டு மற்றவருக்கு பொருத்தப்பட்டுள் ளன. இனி மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உறுப்புகளை மற்றவருக்கு பயன்படுத்த முயற்சிகள் மேற் கொள்ளப்படும். விரைவில் இதற்கான "நெட்வொர்க்' ஏற்படுத்தப்படும். செல்லமுத்துவின் படம் எங்கள் ஆஸ்பத்திரியில் என்றைக்கும் இடம்பெற்றிருக்கும். இவ்வாறு கூறினர்.

0 comments: